ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படை என்ன ?

கிறிஸ்தவம், இஸ்லாம், யூத மதங்கள் ஆகியவையே ஆபிரஹாமிய மதங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஆபிரஹாமை தங்களின் பூர்வீகமாக ஏற்பதினால் இந்தப்பெயர். இவற்றின் கருத்துக்களை ஓரளவுக்கு நாம் பல்வேறுவகைகளில் நாம் கடந்து வந்திருப்போம். ஆனாலும், அவற்றின் நம்பிக்கைகளின் அடிநாதமாக இருப்பது என்னவென்று நாம் தெளிவாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்போது தான் இயேசுவும் வாசுவும் ஒன்று என்பதான பிதற்றலான வரிகளை நம்மில் பலர் கூறுவது எவ்வளவு தவறென்று தெரியும்.
 
பொதுவாக ஆபிரஹாமிய மதங்கள் அனைத்தும் ஓரிறைக்கொள்கையை உடையவை என்பதை அறிவோம். தங்களுடைய தெய்வத்தை தவிர்த்து உலகில் வேறு தெய்வம் கிடையாது என்ற கொள்கையை கொண்டவை. அப்படியான எந்த தெய்வத்தை அவை வணங்குகின்றன ? “கர்த்தர்” “ஆண்டவர்” என்றெல்லாம் பைபிளில் கூறப்படும் மூல தெய்வம் எது ? எப்போதுமே ஒரு தெய்வம் மட்டுமே வணங்கப்பட்டதா ? பிற தெய்வங்களின் நிலை என்ன ? முதலிய கேள்விகளுக்கான விடையை காண முயல்வோம்.
 
இதற்கு, 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தூர மத்திய கிழக்காசிய பகுதிக்கு நாம் பயணிக்க வேண்டும். இக்காலக்கட்டத்தில், அப்பகுதியில் இஸ்ரேலியர்கள் உட்பட போன்ற பல்வேறு இனங்கள் வாழ்ந்து வந்தன. அவை பல்வேறு தெய்வங்களை வணங்கி வந்தன. ஏல் என்ற படைப்புக்கடவுள் கனானியர்களால் வணங்கப்பட்ட தெய்வம் முக்கியமானதொன்று. இஸ்ரேலியர்கள் யாஹ்வே (பைபிளில் யெகோவா என்று வரும். யாஹ்வே என்பதே மூல பதம்) என்ற போர் தெய்வத்தை வணங்கி வந்தனர். காலப்போக்கில் யாஹ்வே தெய்வம் ஏலின் அனைத்து அம்சங்களையும் கிரகித்துக்கொண்டது. பைபிளின் பழைய ஏற்பாடு (யூதர்களின் தனாக்) ஏல் மற்றும் யாஹ்வே வழிபாட்டர்களின் வெவ்வேறு நூல்களை ஒன்றினைத்தே உருவாக்கப்பட்டது.
 

பைபிளில் பல இடங்களில் இஸ்ரேலியர்களின் தங்கள் தெய்வத்தை சுட்டும்போதெல்லாம் பெரும்பாலும் எபிரேய மூலத்தில் “யாஹ்வே” என்ற பெயருடன் “ஏல்” என்ற துணைப்பெயரும் காணப்படுகின்றது. மொழிப்பெயர்ப்பாளர்கள் தான் அதை பொத்தாம் பொதுவாக “கர்த்தர்” “ஆண்டவர்” என்று மொழிப்பெயர்த்தனர்.
 
யாஹ்வேவுக்கு துணையான பெண் தெய்வமும் உண்டு. இவளுக்கு “அஷேரா” என்று பெயர். ஒரு அகழ்வாராய்ச்சியில் ஒரு குடுவையின் மீது “யாஹ்வேவும் அவனுடைய அஷேராவும்” என்ற வாக்கியம் காணப்பபட்டது. இதன் காலம் பொது சகாப்தத்திற்கு முன்னரான எட்டாம் நூற்றாண்டு. இஸ்ரேலிய மக்கள் மத்தியில் சிறு தெய்வமாக வழிபடப்பட்ட யாஹ்வேவின் வழிபாடுகள் மிகப்பிற்காலம் வரை தொடர்ந்து வந்ததை அறியலாம்.
 
இவ்வறாக ஏல் தெய்வத்தை உள்வாங்கிய யாஹ்வே இஸ்ரேலின் பிரதான ஒரே தெய்வமாக இஸ்ரேல் மக்களின் மீது “தீர்க்கதரிசிகள்” எனப்படுவோரால் ஸ்தாபிக்கப்பட கடுமையாக முயற்சிக்கப்பட்டது. யாஹ்வேவை பிரதானமாக வழிபட்டாலும், பலரும் பாரம்பரியமான சுற்றியுள்ள தேசங்களின் பிற தெய்வங்களையும் தொடர்ந்து வணங்கியே வந்தனர். பண்டைக்காலத்தில் நெருங்கிய தேசங்களின் தெய்வங்களும் வழிபடப்பட்டது சாதாரணமாக நிகழ்ந்த ஒரு ஒன்று. எகிப்திய தெய்வங்கள் கிரேக்கத்திலும் கிரேக்க தெய்வங்கள் எகிப்திலும் என்பதாக பலகடவுளர்களையும் மக்கள் வழிபட்டே வந்திருக்கின்றனர்.
 
பைபிளின் பழைய ஏற்பாடு அனைத்துமே யாஹ்வே வழிபாட்டாளர்களால் தொகுக்கப்பெற்றதே. யாஹ்வேவின் வழிபாட்டை மட்டும் ஸ்தாபித்து மற்ற தெய்வங்களின் வழிபாட்டை தடுக்க யாஹ்வே தெய்வத்தை வணங்கியவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
 
யாஹ்வேயின் கூற்றாக பழைய ஏற்பாட்டில் வருபவை:
 
[…] என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது […] : யாத்திராகமம் 20 : 3
 
[…] நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து […] : யாத்திராகமம் 20 : 5
 
[…] மேலும், அந்நிய தெய்வங்களின் பெயரைக் கொண்டு ஆணையிடாதீர்கள். உங்கள் வாயினின்று அது யாராலேயும் கேட்கப்படலாகாது […] : யாத்திராகமம் 23 : 13
 
[…] அந்நிய தெய்வத்திற்கு ஆராதனை செலுத்தாதே. ஆண்டவருடைய திருப்பெயர்: பொறாதவர் […] : யாத்திராகமம் 34 : 14
 
பைபிளின் யாத்திராகமம் முழுக்கவே இதுபோன்ற பிரசங்கங்களை காணலாம். இதன் மைய நோக்கம் பிற தெய்வ வழிபாடுகளை புறக்கணித்து யாஹ்வேவின் வழிபாட்டை முழுமூச்சாக ஸ்தாபித்தல்.
 
இவ்வாறான யாஹ்வேவின் குணநலன்கள் யாவை ? யாஹ்வே பூர்வீகத்தில் போர் தெய்வமாக இருந்ததாக கருதப்படுகிறது. யாஹ்வே கடுங்கோபம் கொண்ட தெய்வமாக பழைய ஏற்பாட்டில் சித்தரிக்கப்படுவது இதன் தொடர்ச்சியாக இருக்கலாம். பழைய ஏற்பாட்டில் “ஒழிப்பேன்” “அழித்துப்போடுவேன்” “சங்காரம் பண்ணுவேன்” என்றெல்லாம் தான் யாஹ்வேயின் கூற்றுகளாக அதிகம் காணப்படுகின்றன. யாஹ்வேயுடன் பாகால், அஷேரா, இஷ்தார் என்ற பல்வேறு தெய்வங்களையும் வணங்கி வந்தனர். யாஹ்வே பூர்வீகமாகவே சிறு தெய்வமாக இருந்தபடியால், தன்னைத்தவிர எந்தவொரு தெய்வத்தையும் வணங்குவதை யாஹ்வே ஏற்கவில்லை. பழங்குடிகளின் கூறுகளின் ஒன்று ஸ்தாபிக்கப்பட்ட எல்லைகளை தீவிரமாக கடைபிடித்தல். ஸ்தாபிக்கப்பட்ட எல்லைகளை தாண்டுவது அத்துமீறலாக கருதப்பட்டும். யாஹ்வே தெய்வம் தன்னைவிடுத்து இஸ்ரேலியர்கள் பிற தெய்வங்கள் வணங்குவதை பொறாமையுடனும் அத்துமீறலாகவும் காண்பது இந்த குழுமனோநிலையின் தொடர்ச்சியே.
 
[…] பாகால் வழிபாட்டில் எஞ்சியிருப்பதையும் அந்தச் சிலை வழிபாட்டு அர்ச்சகர்களின் பெயரையும் அழித்து விடுவேன். வீட்டின் மேல்தளத்திலிருந்து வான் படைகளை வணங்குவோரையும், ஆண்டவரை வணங்கி அவர் பெயராலும் மில்க்கோம் தெய்வத்தின் பெயராலும் ஆணையிடுவோரையும் ஒழித்து விடுவேன் […] : செப்பனியா 1 : 4-5
 
[…] பிள்ளைகள் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றார்கள்; பெண்கள் மாவில் எண்ணெய் விட்டுப் பிசைந்து அப்பம் சுட்டு விண்ணரசிக்கும் வேற்றுத் தெய்வங்களுக்கும் படைக்கிறார்கள்; பானப்பலிகளையும் இடுகிறார்கள். நமக்கோ சினத்தை மூட்டுகிறார்கள் […] : எரேமியாஸ் 7 : 18-19
 
[…] பாகால்களின் விழாக்களை அவள் கொண்டாடி, அவற்றுக்கு நறுமணப் பொருட்கள் கொளுத்தி, வளையல்களாலும் நகைகளாலும் தன்னை அணி செய்து, தன் காதலர்கள் பின்னாலேயே போய் நம்மை மறந்ததற்கு அவளைப் பழிவாங்குவோம், என்கிறார் ஆண்டவர் […] : ஓசே 2 : 13
 
[…] அந்நாளில், ‘என் கணவன்’ என என்னை அவள் அழைப்பாள்; ‘என் பாகாலே’ என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள்” என்கிறார் ஆண்டவர். அவளுடைய நாவினின்று பாகால்களின் பெயர்களை நீக்கிவிடுவேன்; இனிமேல் அவர்களைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டாள். […] : ஓசே 2 : 16
 
மேற்கூறியவை வெறும் உதாரணங்களே, பழைய ஏற்பாடு முழுக்க இது போன்ற, இஸ்ரேலியர்கள் வணங்கிய பிற தெய்வங்களின் மீது “பொறாமை”யுள்ள யாஹ்வே தெய்வத்தின் வசனங்களை காணலாம். பெரும்பாலும் யாஹ்வேவுக்கு எதிராக கூறப்படுவது பாகால் என்றழைக்கப்படும் தெய்வம். யாஹ்வேயை பிரதானப்படுத்த, பாகால் வழிபாட்டாளர்கள் யாஹ்வேயிடம் தோற்றதாக கூட கதைகள் சேர்க்கப்பட்டன.
 
இதில் முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும், யாஹ்வே தெய்வம் தன்னத்தவிர பிற தெய்வங்களை இருப்பதை தெளிவாக மறுப்பதில்லை. பிற தெய்வங்களை விட தன்னையே வணங்க வேண்டும் என்பதையே மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறது. பிற தெய்வங்களின் இருப்பை இது மறைமுகமாக உறுதி செய்வதாக பைபிள் ஆரய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆக, இஸ்ரேலியர்கள் யாஹ்வேவை தவிர்த்தும் பிற தெய்வங்களின் இருப்பை நம்பினர். இவ்வாறாக பல தெய்வங்கள் இருப்பினும் (இஸ்ரேலியர்களுக்கு) முக்கிய தெய்வமாக யாஹ்வே தெய்வமும் இருந்தது.
 
ஏற்கனவே குறிப்பிட்டது போல, பல்வேறு பிற தெய்வங்களின் தன்மைகளும் யாஹ்வேவுடன் இணைக்கப்பட்டன. ஏன், யாஹ்வேவுக்கு எதிரான தெய்வமாக கருதப்பட்ட பாகால் தெய்வத்தின் சில குணங்களையும் யாஹ்வே தெய்வம் ஏற்றதாக தெரிகிறது. ஆக, பல்வேறு தெய்வங்களுடைய குணநலன்களை உடைய தெய்வமாக யாஹ்வேவின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்தது. இறுதியில் சிருஷ்டித்து பரிபாலித்து நிக்கிரஹம் செய்யும் சர்வ வல்லமை நிறைந்த தெய்வமாக ஆனது. அனைத்து தெய்வங்களின் இருப்பும் மறுக்கப்பட்டு யாஹ்வே மட்டுமே “ஜீவனுள்ள” ஒரே தேவனாக கருதப்பட்டது பிற்காலத்திலேயே எனத்தெரிகிறது. அதாவது இஸ்ரேலிய பல தெய்வவழிபாட்டில் பிரதான தெய்வமாக இருந்து (Monolatry), பிறகு அது ஒரே தெய்வமாக காலப்போக்கில் ஆகிப்போனது (Monotheism). இதற்கு சமய காரணங்களை விட அரசியல் காரணங்களே அதிகம். ஒரு தெய்வ வழிபாடு என்பது இஸ்ரேலியர்களை யாஹ்வே என்ற ஒரே தெய்வத்தின் குடைக்குள் கொண்டு வருகிறது.
 
யூதர்கள் யாஹ்வே தெய்வத்தை தங்கள் சொந்த இனத்தின் தனிப்பட்ட தெய்வமாக (குலதெய்வம் போல, இனதெய்வம் என்று வைத்துக்கொள்ளலாம்) கருதினர் (அல்லது இன்னொரு விதத்தில் தனாக்கின் படி, யாஹ்வே தெய்வம் இஸ்ரேலியர்களை தன்னுடைய மக்களாக தேர்ந்தெடுத்துக்கொண்டது). யாஹ்வே தெய்வம் இஸ்ரேலியர்களை குறித்து மட்டும் கவலைப்பட்டு, அவர்கள் வேறு தன்னைத்தவிற எந்த தெய்வங்களையும் வணங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. ஏதேனும் “தெய்வக்குற்றம்” நேர்ந்தால் இஸ்ரேலிய மக்களை யாஹ்வே தெய்வம் தண்டித்தது. ஒரு விதத்தில், நமது கிராம தேவதைகளைப்போல. யாஹ்வே தெய்வம் இஸ்ரேலியர்களுடன் மட்டும் உறவாடியது அவர்களுடன் பலமுறை “உடன்படிக்கை” எல்லாம் செய்துகொண்டது.
 
[…] நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும் […] : ஆதியாகமம் 17 : 4-5
  
[…] உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன் […] : ஆதியாகமம் 17 : 7
 
பழங்குடி தெய்வமாக இருக்கிறபடியால் பலிகேட்பதும் அதற்கு உரித்ததாக கருதப்பட்டது.
 
[…] மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக. நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன் […] : யாத்திராகமம் 20 : 24
 
எனவே, இஸ்ரேலியர்கள் அந்த உடன்படிக்கைகளை மீறாது “தெய்வக்குற்றம்” (பெரும்பாலும் யாஹ்வேவைத்தவிர பிற தெய்வஙக்ளை வணங்காதது) நேராது, யாஹ்வே தெய்வத்தை, பலிகள் பல கொடுத்தும் பூஜைகள் செய்தும் பல விதங்களில் மகிழ்விப்பது கடமையாக கொள்ளப்பட்டது. உடன்படிக்கையை மீறும் போது யாஹ்வே தெய்வம் அவர்களை தண்டித்தது (என தீர்க்கதரிசிகள் பிரசங்கித்தனர்).
 
“கர்த்தர்” “ஆண்டவர்” “தேவன்” என்ற பல்வேறு வார்த்தைகளால் ஆபிரஹாமிய மதத்தவர்கள் குறிப்பிடுவது ஏதோ நிர்குணமான பூரணமான abstract தெய்வத்தை அன்று. இஸ்ரேலியர்களைக் குறித்து மட்டும் கவலைப்படுவதும் இஸ்ரேலிய பழங்குடியர் வணங்கியதுமான “யாஹ்வே” தெய்வத்தையே என்பதை நாம் முற்றிலும் புரிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாக கூறுவாதானால் யூதப்பழங்குடியினரின் பூர்வீக சிறுதெய்வங்களுள் ஒன்றை. யூதர்கள் தங்கள் இனத்தை காப்பதாக நம்பிய தெய்வம். அதை மகிழ்வித்தால் தங்கள் இனம் மகிழ்வடையும் என்றும், அதை கோபமாக்கினால் “தெய்வகுற்றமாகி” அதன் கோபம் இனத்தை அழித்து விடும் என்று தங்களை இனத்தை மட்டுமே மையமாக கொண்டு வணங்கப்பட்டு மகிழ்விக்கப்பட்ட சிறு தெய்வம்.
 
யாஹ்வே குறித்து விரிவாக கண்டோம். அடுத்து, ஆபிரகாமிய மதங்களின் அடிப்படை தத்துவம் என்னவென்று கான்போம். இக்னோரன்ஸ் இஸ் ப்லிஸ் (Ignorance is Bliss) என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அறியாமை இன்பம் தரக்கூடியது என்பதே இதன் பொருள். இதுவே ஆபிரகாமிய மதங்களின் தத்துவத்தை விவரிக்கும் மிகச்சிறந்த வாக்கியம். ஏன், அவர்களுடைய மகாவாக்கியமாக எடுத்துக்கொள்ளுங்களேன். ஆபிரஹாமிய மதங்கள் அனைத்தும் அஞ்ஞானத்தையே அடிப்படியாக கொண்டவை. அவை அடிப்படையாகவே ஞானத்தை நோக்கி பயணப்பட்டது கிடையாது.
 
யாஹ்வே தெய்வம் மனிதர்கள் ஞானத்தை அடையவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் இருப்பது தெளிவாக தெரியவருகிறது. யாஹ்வே தெய்வம் ஆணையும் பெண்ணையும் படைத்து விட்டு, அவர்களை ஒரு விருக்ஷத்தின் கனியை மட்டும் உண்ணக்கூடாது என்று கட்டளை இடுகிறது. இருப்பினும் அவர்களை உண்கின்றனர், அதன் மூலம் நன்மை தீமையை பகுத்தறியும் நிலையை பெறுகின்றனர்.
 
அந்நிலையில் யாஹ்வே தெய்வம் இவ்வாறு தனக்குள் எண்ணுகிறது :
 
[…] பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான். இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றென்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று […] : ஆதியாகமம் 3 : 22
 
இது மிக மிக முக்கியமானது. இந்திய தத்துவங்கள் அனைத்தும் ஞானத்தை அடைவதையே தனது லக்ஷ்யமாக கொண்டவை. அஞ்ஞானத்தை விளக்கி நன்மை தீமைகள் தெளிவாக அறிவதையே அடிப்படையாக கொண்டவை. ஆனாலோ, யாஹ்வே தெய்வம் மனிதன் ஞானம் அடைந்ததை தனக்கு போட்டியாக எண்ணுகிறது.
 
[…] இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார் […] : ஆதியாகமம் 3 : 24
 
மனிதனின் வாழ்நாள் நோக்கமே ஞானத்தை நோக்கி தானே ? பாகனிய மதங்களின் கடும் தாக்கத்தில் எழுந்த ஆரம்பகால கிறிஸ்தவ பிரிவுகளுள் ஒன்று நாஸ்டிசிசம். மனிதன் ஞானம் அடைவதை தடுக்கும் தெய்வம் பெருந்தெய்வமாக இருக்க இயலாது, என்றெண்ணி அதையும் மீறி முழுவதுமான ஞானஸ்வரூபமாக ஒரு தெய்வம் இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதினர். யாஹ்வே சிறு தெய்வம் எனவும் அந்த பெருந்தெய்வத்தின் படைப்பெனவும் ஆரம்ப கால கிறிஸ்தவ பிரிவொன்றே கருத்துக்கொண்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
இவ்வாறாக ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படையே, இந்தியத்துவத்துக்கு நேர் எதிர் ஆனவை. யூதமதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவற்றுக்கான அடிப்படை வேறுபாடு தான் என்ன ? ஏற்கனவே கண்டது போல் இம்மூன்று மதங்கள் வழிபடும் தெய்வம் ஒன்று தான் – அதுவே யாஹ்வே. இவற்றின் புராணங்களும் கதைகளும் நம்பிக்கைகளும் இஸ்ரேலிய பழங்குடி தொன்மங்களை அடிப்படையாக கொண்டவை. பிறகு இவற்றின் மத்தியிலுள்ள வித்தியாசம் தான் என்ன ? யாஹ்வே தெய்வம் அனுப்பிய கடைசி தீர்க்கதரிசி யார் என்பதே அது.
 
யூதர்களை பொருத்த வரையில் யாஹ்வே தெய்வத்தால் அனுப்பப்பட்ட கடைசி தீர்க்கதரிசி மலாக்கி. இவருக்குப் பின் தோன்றிய இயேசு திடீரென தன்னையே யூதர்களின் தனாக்கில் கூறப்பட்ட யூதர்களை காப்பாற்ற கடவுள் அனுப்பிய தீர்க்கதரிசியாக அறிவித்துக்கொண்டார். ஆனாலும் யூதர்கள் முற்றிலும் அதை நிராகரித்தனர். இயேசுவை யாஹ்வேவின் தீர்க்கதரிசியாக யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .கிறிஸ்தவர்கள் இயேசுவையே கடைசி தீர்க்கதரிசியாவும், யாஹ்வேவின் புத்திரனாகவும் கருத தலைப்பட்டனர். பல்வேறு பாகனிய கருத்துக்களை உள்வாங்கி, மூல யூத மதத்தில் இருந்து பெரிதும் வேறுபட்டுப்போயினர். யூதர்களின் தனாக்கை, பைபிளின் பழைய ஏற்பாடாக ஏற்றுக்கொண்டனர். இஸ்லாமியர்கள் நபியை கடைசி தீர்க்கதரிசியாக கருதிக்கொள்கின்றனர் (அவ்வழியில் இயேசுவை அவருக்கு முந்தின தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்கின்றனர்), நபியின் மொழிகளே யாஹ்வேவின் கடைசிச்செய்தி எனக்கருதுகின்றனர்.
 
அவ்வகையில், யாஹ்வேவினுடைய கடைசி அப்டேடட் செய்திகள் எவரிடம் உள்ளது என்பதே இவற்றுக்கிடையேயான வேறுபாடுக்கான அடிப்படை காரணம்.
 
ஆக, ஏதேனும் ஒரு ஆபிரஹாமிய மதத்துக்கு மதம் மாறுகிறவர்கள், தாங்கள் வணங்க முற்படுவது ஒரு தூர மத்திய கிழக்காசிய பழங்குடி தெய்வத்தை என்பதை அறியாமல் இருக்கின்றனர். மத்திய கிழக்காசியாவின் சிறு தெய்வம் ஒன்றின் வழிபாடு எவ்வாறெல்லாம் உலகை ஆட்டிப்படை(க்கிற)(த்த)து என்பதை எண்ணும்போது வியப்பே மேலிடுகிறது. இந்திய மதங்களைப்போல ஆழ்ந்த தத்துவங்களோ குறைந்த பட்சம் ஞானத்தை நோக்கிய பயணமோ இவற்றினிடத்தில் இல்லை. மனிதன் நன்மை தீமை பகுத்தறிவதை தடுக்க நினைத்து, அதை நடவாமல் போய் மனிதன் நன்மை தீமை அறியும் திறனை பெற்றவுடன் அதை பொறாமையுடன் கண்ட “எரிச்சலுள்ள” இஸ்ரேலிய போர் தெய்வத்தை அடைவதை தான் அவர்கள் விரும்புகிறார்கள் போல். ஏதேன் தோட்டத்தில் உண்ட கனியின் மிச்சம் மீதி உணர்வு இருந்திருக்குமானால் எது சரி எது தவறு என்று அவர்களுக்கே தெரிந்திருக்க வேண்டும்
 

மேற்கோள்கள்:

1. Robert Wright (2009) : Evolution of God – ISBN: 978-0-316-73491-2

2 thoughts on “ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படை என்ன ?

  1. Dear Shri Vinodh
    Since your age is not known, I sincerely pray to the Almighty that you be blessed with Long Life of Health and Happiness(shatamaanam bhavatu). I am just going through your different postings on Grantha, Spirituality etc.,Regarding Abrahamic religions, I would like to point out that Shri Kanchi Mahaperiyava has remarked in Deivaththin Kural by Shri Ra Ganapathi that Abraham and Sara might have come from Brahma and Sarasvati and that the Apple may be Pippala vruksha. Sanatana Dharma’s scriptures have been manipulated to bring out the old testament.
    Anyhow, Satyameva Jayate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *